புத்தகச் சுமையைக் குறைக்க விரைவில் டிஜிட்டல் கல்வி திட்டம்: மத்திய அரசு
பள்ளி மாணவர்களின் புத்தகச் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வியாழக்கிழமை கேள்வியெழுப்பினர்.
இதற்குப் பதிலளித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு உறுதியாகஉள்ளது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ உள்ளிட்ட அமைப்புகளுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், சிபிஎஸ்இ வாரியம் தமது வரம்பின் கீழ் வரும் பள்ளிகளுக்கு அண்மையில் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. அதன்படி, இரண்டாம் வகுப்பு வரை ஒரு புத்தகத்தைக் கூட மாணவர்கள் எடுத்து வரக் கூடாது என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வகுப்பு மாணவர்களின் புத்தகச்சுமை படிப்படியாக குறைப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் இரண்டு புத்தகங்களையும், 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 3 புத்தகங்களை மட்டும் பள்ளிக்கு கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலும் பரிந்துரை அளித்துள்ளது. அதனையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.மேலும், பள்ளி மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்காக, டிஜிட்டல் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக, 25 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இந்த டிஜிட்டல் கல்வி திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.
No comments:
Post a Comment